, ,

ஈரம் படிந்த இலக்கியம்

எழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை நெய்ய திரண்டு நிற்கின்றன மேகங்கள். எவரும் அழைக்காமலே வந்து நிற்கிறது மழைக்காலம். ”இப்ப இந்த ம்ழையில்லை என்று எவன் அழுதான்” என எரிச்சல்படும் நகரவாசிகள் மீது சரம் சரமாய் பூந்தூறல் தூவிப் புன்னகைக்கிறது வானம். கார்காலம் மனதில் கவிதையும் சுரக்கும் காலம். முன்பு எழுதிய வள்ளுவனிலிருந்து இன்று மலர்ந்த புதுக் கவிஞன் வரை மழையைப் பாடாத கவிஞர்கள் எவரும் இல்லை..மழையைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனும் இல்லை. இந்திய இலக்கியத்தின் ஏராளமான பக்கங்களை மழை நனைத்துக் நடக்கிறது. படித்தவற்றில் பல இன்று உலர்ந்து விட்டன. சில இன்னும் வடியாமல் உள்ளேயே தங்கிவிட்டன.

வானத்தினுடைய சிறப்பே மழைதான் என்கிறார் வள்ளுவர். இறைவனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பெற்று அது குறளில் விரிகிறது. இரண்டு வரிகளுக்குள் அவர் தொன்மமும் பேசுகிறார். அறிவியலும் பேசுகிறார். தங்கக் காசின் இரண்டு பக்கங்கள் போல தமிழனின் இரண்டு முகங்கள் இவை.

கடலில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக மண்ணுக்குத் திரும்புகிறது என்பது நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயின்ற அறிவியல். அதை இரு வரிகளில் இலக்கியமாகச் செய்திருக்கும் அற்புதம் திருக்குறள். 

முற்றும் அறிந்த ஓரு முது அறிஞானகப் பேசுகிறான் வள்ளுவன் என்றால் ஒரு குழந்தையைப் போலக் குதூகலிக்கிறாள் ஆண்டாள். வாளியிலிருந்து குவளை குவளையாக நீரை முகர்ந்து கொட்டுவதைப் போல ஆழியிலிருந்து மொண்டு மழையாகக் கொட்டு என்கிறாள் அவள். வெண்ணையைத் திருடி வாய்க்குள் ஒளித்து வைத்துக் கொண்டதைப் போல கண்ணன் மழையையும் மறைத்து வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் “ஆழி மழைக்கண்ணா! நீ ஒன்றும் கை கரவேல்!” என்று ஒரு அதட்டலுடன் ஆரம்பிக்கிறது அவளுடைய பாடல்.

பாரதிக்கோ மழையைக் கண்டால் கன குஷி. என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம், கண்டோம் கண்டோம்’ எனத் தாளங்கள் கொட்டிக் குதித்துக் கொண்டாடுகிறார்.ஈரம் படிந்த இலக்கியத்தின் பக்கங்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒரு குடியானவனுடையது. பள்ளுப் பாட்டு என்று எனது பாடப் புத்தகங்கள் சொல்லின. 16ம் நூற்றாண்டில் விவசாயிகள் வளர்த்த இலக்கியப் பயிர் அது. 

ஆற்று வெள்ளம் நாளை வரத் 
தோற்றுதே குறி –மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே

என்ற பாடலை நீங்களும் என்றேனும் ஒரு நாள் படித்திருக்கலாம்.

அநதப் பாடலை நடத்திய ஆசிரியை அந்த வகுப்பை ஒரு நாடகக் காட்சி போலவே அமைத்து விடுவார். 'மின்னுதே'வில் 'தே' விற்கு ஓர் அழுத்தம் கொடுத்து தரையை ஓங்கி உதைக்க வேண்டும். மொத்த வகுப்பும் அந்த மாதிரி செய்யும் போது ஒரு tap dance போல இருக்கும். 'கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே' என்னும் போது உய்ய்ய்ய் என்று சப்தமிட்டுக் கொண்டு ஒரு பையன் இடமிருந்து வலமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவான். 'சொறித் தவளை கூப்பிடுகுதே' என்னும் போது மாணவிகள் குரலை மாற்றைக் கொண்டு தவளை போல ஒலி எழுப்புவார்கள். குஷியாக இருக்கும். 

தமிழ்நாட்டின் கிழக்கே ஈழம். மேற்கே , மலையாளம் இந்த இரண்டு திக்கிலிருந்தும்தான் தமிழகத்திற்கு மழை வர வேண்டும். வடக்கிலிருந்து வராது. அங்கிருந்து எப்போதாவது குளிர்காற்று வீசும். தெற்கிலிருந்தும் அதாவது பொதிகை மலையிலிருந்தும் காற்று வீசும். ஆனால் அது இதமான தென்றல். வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல் என்று தமிழர்கள் பெயர் வைத்தார்கள். மலையாளத்திற்கும் ஈழத்திற்குமாக அதாவது மேற்கிற்கும் கிழக்கிற்குமாக மின்னல் வெட்டுகிறது என்றால் வரப்போவது பெரிய மழையாகத்தான் இருக்கும். அந்தப் பெரிய மழை குறித்துக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குஷிதான்.

மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது. 

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்

 aruppukkottaitown.blogspot.in

0 கருத்துகள்: