, ,

ஈனப் படுகொலை – சுப. உதயகுமாரன்



இளவரசன் மரணம்

கொலையா, தற்கொலையா?
இளவரசன் சாவு
எங்கே நிகழ்ந்தது, எப்படி நடந்தது?
இளவரசன் மறைவு
குறித்தக் கேள்விகள் இவையல்ல!
இளவரசன் முழுமை
பாதியிலேயே பறிக்கப்பட்டது ஏன்?

சாதி வெறி, பதவி வெறி,
நாற்காலி வெறி, அதிகார வெறி,
தன் குடும்பம் தரணியாளும் வெறி!
தன் பெண்டு பிள்ளைகள் சக்தி பெரும் வெறி!
தான் இறவாமையோடு என்றென்றும் வாழும் வெறி!

இளவரசனை
யார் கொன்றார்கள்?
எதற்காகக் கொன்றார்கள்?
கொன்றவருக்குத் தண்டனை என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள்
இங்கிருப்போர் எல்லோரும் அறிவர்:
அமைதி, மவுனம், நிசப்தம்!

தமிழனுக்கு என்ன இழவுடா நடக்கிறது?
தமிழினத்தைக் கொல்கிறார்கள்!
அங்கே பிறிதோரினம் நடத்தும் இனப்படுகொலையில்
கொத்துக் கொத்தாக, கூட்டங் கூட்டமாக!
இங்கே தன்னினமே நடத்தும் ஈனப் படுகொலையில்,
ஒவ்வொரு திவ்யாவாக, ஒவ்வொரு இளவரசனாக!
நட்ட நடுப் பகலில், நாற்சந்தியில்,
நம் அனைவரின் கண் முன்னால்,
நம் மவுனத்தின் உதவியுடன்!

தம்பி,
வெறும் உணர்வுகளையும்
வெற்று வார்த்தைகளையும்
மட்டும் கோர்த்துக் கொண்டிருக்கும்
கையாலாகாத என்னை
மன்னித்துக் கொள்!
தமிழனாய்ப் பிறந்தது
நம் தவறு!
அமைதி கொள்!!

சுப. உதயகுமாரன்

0 கருத்துகள்: