, ,

தமிழர்களைப் பேசாத தமிழ் இலக்கியம்

 aruppukkottaitown.blogspot.in

சில அடிப்படைகளை மீண்டும் நினைவில் கொள்வோம். சங்க இலக்கியம் என்று இப்போது நாம் காண்பது, கிறித்து பிறப்புக்கு முன் நானூறு ஆண்டுகள், பிறப்புக்குப் பிறகு முன்னூறு ஆண்டுகள் அல்லது நானூறு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து எடுத்திருக்கும் முடிவாகும். இவை தொகுக்கப்பட்ட காலம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு என்பதையும் நினைவு கொள்வோம். எழுதப்பட்ட காலத்து அரசியலும் தொகுக்கப்பட்ட காலத்து அரசியலும் நாம் கவனம் கொள்ள வேண்டியவை. மேலும் சங்க காலம் பொற்காலம் என்கிற அரசியல்வாதிகள் கட்டமைக்கப்பட்ட பச்சைப் பொய்களையும் நாம் புறம் தள்ளுகிறோம். தமிழனுக்கு எந்தக் காலமும் பொற்காலமாக இருந்ததில்லை.

மனிதர்கள் மலையிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்தார்கள். காடுகளிலும். புல்வெளிகளையும் சார்ந்து வாழ்ந்தார்கள். அப்புறம் ஆற்றுப்படுகையைச் சார்ந்து விவசாயத்தைக் கண்டுபிடித்து வாழ்ந்தார்கள். கடற்கரையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள், கடல் வளத்தைக் கண்டுபிடித்து அதைக்கொண்டு பிழைத்தார்கள். நீர் வளம் குறைந்த வறட்சிமிக்க பகுதியில் வாழ்ந்த, வாழநேர்ந்த மக்கள், தவிர்க்க முடியாமல் சில வேளைகளில் வழிப்பறியிலும், பல வேளைகளில் அப்பிர தேசத்துக்குரிய பயிர்களை விதைத்தும் வாழ்ந்தார்கள். இதுவே தமிழ் நிலத்துச் சித்திரம். வாழ்க்கைத் தேவை அவர்களுக்கு வேட்டையைக் கற்றுத் தந்தது. காட்டு வாழ்க்கை விலங்குகளோடு இணைந்து இருந்ததால், விலங்குகளோடு மோதிச் செத்தும், அவைகளைப் பழக்கியும் வாழக் கற்றார்கள். கொழுவை ஏர் என்கிற கருவியைக் கண்டுபிடிக்கும் அவசியத்தை ஆற்று நீரும், பசித்த வயிறும்கற்றுக் கொடுத்தன. அதுபோலவே தூண்டிலும், வலையும் வாழ்க்கை. அது பற்றிய புரிதலே இன்றி நடந்து கொண்டிருந்தது. பாட்டும், கூத்தும், இசையும் அவர்கள் வாழ்வைச் சித்தரித்தன. அக்காலத்துத் தமிழர் வாழ்வில், ஒரு நாளைக் கழிக்க ஆறு, ஏழு சொற்கள் போதுமானவையாக இருந்தன. அகராதிகள் அவசியப்படவில்லை. காட்டிலாகாக்கள் தோன்றவில்லை. மரங்கள் உயிர்பிழைத்திருந்தன. மரங்கள் அவர்களுக்கு மரங்கள் அல்ல. வாழ்க்கைத் துணைகள். ஆகவே மாதம் ‘மும்மாரி மழை பொழிந்தது’.

தமிழக வாழ்வில், மருத நிலம் இயல்பாகவே தன் உற்பத்திச் செழுமை காரணமாக வளர்ச்சி கண்டது. உற்பத்தியும் உற்பத்திப் பெருக்கமும் தனி நபர்க்கு உரிமையாகிறது. உபரிகள், பகுத்தளிக்கப்படாத களவுச் சொத்துகள் (சொத்துகள் என்பன மாடும் நெல்லும்தான். மாடு என்றாலே செல்வம் என்றுதான் பொருள்) குடும்பங்கள் உருவாகவும், தனிச் சொத்தும், தனி மனைவியும் உருவாகக் காரணமாயின. பெரிய பெரிய இரும்புப் பூட்டுகள் உருவாகிப் பெண்களின் அல்குல்களுக்குப். போடப்பட்டு சாவிகள் கணவர்களின் அன்னாக்கயிறில் தொங்கின இரண்டாவது குறிகளாக. ஆண் குதிரைக்கு பூட்டும் இல்லை சாவியும் இல்லை, இன்றுவரைக்கும். அப்புறம் வாழ்க்கை சிக்கலைக் காண ஆரம்பித்தது. அரசுகள் உருவாயின. மக்கள், இன்று போலவே சகல அதிகாரங்களையும், தங்கள் சுதந்திரத்தையும் மன்னனுக்கு அளித்தார்கள். மன்னர்கள், மனைவி மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, ஒழிந்த நேரத்தில் சண்டை போட்டுக்கொண்டு பிழைத்துக்கிடந்தார்கள்.

மொழி அதிகாரத்தோடு வளர்ந்தது. அதிகார வர்க்கத்தின், ஆதிக்கத்துக்குச் சேவகம் செய்யவே, மொழிவளர்க்கப்பட்டது. மொழியைப் பிழைப்பு ஊடகமாக எடுத்துக் கொண்ட புலவர் வர்க்கம் உருவானது.

புலமை வர்க்கம் பிராமணர்களாலும், வேளாளர்களான கிழார்களாலும், வணிகர்களாலும், அரசர்களாலும், ஆசிரியர்களாலும், பல தொழிலாளர்களாலும் நிரம்பியது. தமிழ்ப் பெண் கவிகள் சுமார் 40 என்று கணக்கிடப்பட்டது. பெண் கவிகள், ஆண் கவிகளுக்குச் சற்றும் குறையாதவர்கள் என்பது மட்டும் அல்ல. பல சமயங்களில் மேம்பட்டவர்கள். இது தமிழின் பெருமைகளில் ஒன்று.

மனித வாழ்க்கையில் அக்கறை உள்ள, மக்கள்பால் அன்பும் கொண்ட புலவர்கள் அரசனிடம் ‘மக்கள் உயிர் வாழ்க்கை உணவும், நீர் ஆதாரமும் ஆகும். ஆகவே குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை உருவாக்கு என்று யோசனை சொன்னார்கள். அதிகம் வரி போட்டுக் கசக்காதே என்றார்கள். பங்காளிச் சண்டை வேண்டாம் என்றார்கள். மனைவியைக் கைவிட்டு பரத்தையரை நாடாதே என்றெல்லாம் ஆரோக்கியமான யோசனைகளைச் சொன்னார்கள்.. தமிழ்ப் புலவர்களில் கணிசமான புலவர்கள் ஆரோக்கியமானவர்கள். புலமை வர்க்கத்தில், மனித விரோதிகளும் இருந்தார்கள். ‘சோறாவது நீராவது அவை ஒன்றும் விஷயம் இல்லை. மன்னன்தான் உலகம். மன்னன் என்பவனே கடவுள்!’ என்று சொல்லி, அதிகாரத்தை நியாயம் செய்தார்கள். இப்போது கூட, அரசியல் அதிகாரி ஒருவரைப் பார்த்து ஒரு மகாகவி, “எனக்குத் தமிழ் கற்றுத் தந்தவரே நீங்கள்தான்” என்றார். எனக்குள்ள கேள்வி இதுதான். முதல் வகுப்பில் இருந்து, எம்.ஏ. வரைக்கும் தமிழ் பயிற்றுவித்த பேராசிரிய அறிஞர்கள் உங்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதுதான். இதுவும் அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் தமிழின் பெருமைதான் போலும்.

புலவர்கள், தங்கள் பாடல்களைக் காதல், ஆண்- பெண் உறவு சார்ந்தும், அரசு, அரசாட்சி, போர்கள், வாழ்க்கைத் தத்துவம், வாழ்க்கை முறைகள் சார்ந்தும் கவிதை எழுதினார்கள். காதல் சார்ந்து, மனம் சார்ந்து ஆண்-பெண் உறவை எழுதியவர்கள் கவிதைகளை. ‘அகம்’ என்று பின்னால் வந்தவர்கள் தொகுத்தார்கள். மற்றவைகளைப் ‘புறம்’ என்று தொகுத்தார்கள்.

காதலைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை. நம் ஊடகங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால்தப்பாகச் செய்து கொண்டிருக்கின்றன. ஆண்-பெண் காதல் உறவை மிக அழகாகவே தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. முதலில் ஆண்-பெண் சந்திப்பு நிகழ்கிறது. தொடர்ந்த சந்திப்புகள் அவர்களிடம் வினை ஆற்றுகின்றன. வாழ்க்கை நடப்பில் இதை ஒரு கட்டமாக வகுத்துக் கொண்டார்கள். காதல் எங்கும் நடக்கலாம். காதல் தொடங்குவது மலைப்பகுதியாக வைத்துக் கொள்வது என்று ஒருவகை பாவனை செய்து கொண்டார்கள். பிறகு திருமணம் நடக்கிறது. கணவன் ஏதோ ஒரு காரணமாகப் பிரிகிறான். போர், சம்பாதிப்பது போன்ற காரணங்கள். இதை ஒரு மனநிலையாக, பிரிவு ஒரு வாழ்க்கைக் கட்டமாக ஆக்கிக் கொண்டார்கள். கணவர் பரத்தையரால் ஈர்க்கப்பட்டு பரத்தையர் சேரிக்குச் சென்று மீள்கிறான். மனைவிக்குக் கோபம் வருகிறது. தமிழ்ப் பெண்ணுக்கு அசலான கோபமோ, வெறுப்போ கணவன் மேல் வந்துவிடக்கூடாது. லேசான கோபம் அனுமதிக்கப்படுகிறது. அதுதான் ஊடல். இதை ஒரு கட்டமாக அமைத்துக் கொண்டார்கள். கடல் இரைவது போலப் பிரிவு உணரும் பெண்களின் மனமும் இரங்கி இரைகிறது. இது ஒரு கட்டம். வீட்டுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் பெண் காத்திருப்பு என்கிற வேதனை அடைவதை ஒரு கட்டமாக அமைத்துக் கொண்டார்கள். இந்த ஐந்து கட்டங்களுக்குள் ஊடாடுவதுதான் சங்கக் காதல் கவிதைகள்.

இரண்டு வாழ்க்கை கட்டங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, தொடுதல், பேச்சு, புணர்ச்சிக்கும் முன்னால், அவர்கள் பார்வையில் பட்டு, மீண்டும் மீண்டும் கண்களால் தொட்டு ஒரு மனநிலைக்குள் வருவார்களே, அந்த மனநிலையே காதலின் அரும்பு. அது கைக்கிளை என்று பெயர் கொண்டது. இது ஒரு தலைக் காதல் என்று உரையாசிரியர்களாலும், சில இலக்கணக்காரர்களாலும் விளக்கப்பட்டது. மட்டுமல்லாமல், சிறிய ஒழுக்கம் என்று சொல்லப்பட்டது. அதாவது கள்ளக் காதல் என்பது மாதிரி. காதலில் கள்ளக் காதல், நல்ல காதல் இருக்குமா என்ன? அது மாதிரி, மலர்வதற்கு முந்தைய அரும்பு அல்லது காதலி, காதலியின் முகப்பதிவு நினைப்பு எப்படி சிறுமை ஒழுக்கமாகும் என்பதே நம் கேள்வி. ஒருவர் அறியாமல் ஒருவர் காதலித்தல், காதல் பருவம் எய்தாத ஒருத்தியைக் காதலிப்பது என்பது கைக்கிளை என்று பிறகு வளர்க்கப்படுகிறது. எந்தக் காதலும், ஒரு கணத்தில் முகமும் கண்ணாடியும் போல நேர் நேரே தோன்றுவது அல்லது தொடர்ந்து பயில்வதும் தொடர்வதும்தானே காதலுக்குள் அவர்களைக் கொண்டு செலுத்தும். காதல் புரிந்தவளா அல்லாதவளா என்பதையும் புரிந்துதானே உணர முடியும்? கலவியில் முடியாத, அல்லது கல்யாணத்தில் முடியாத காதல்கள் சிறுமை உடையதா என்ன? உண்மையில் ஆண்களின் பெண்களின் மன உலகில் நிலை பேறுடையது அந்தப் பூர்த்தி அடையாத முதல் காதல்தானே?


அப்புறம் பெரும்திணை. இதைப் பொருந்தாக் காமம் என்கிறார்கள். பொருந்துவதையும் பொருந்தாததையும் யார் முடிவு செய்வது? அந்த இருவர் தவிர வேறு யார் அதற்கு தீர்ப்பு கூறுவது. இதில் முதியோர் காதல், குடிபோதைக் காதல் எல்லாம் செயற்கையாகத் திணிக்கப்படுகிறது. முதியோர் காதலில் என்ன பாவம் படுத்துக்கிடக்கிறது. முதியோர் காதலிக்கக்கூடாது என்பது வன்முறை அல்லவா? ஒரு ஆரோக்கியமான சமூகம் காதலின் சகல கதவுகளையும் திறந்து வைப்பதா அல்லது அடைப்பதா? அந்த இருவர், ஆண்களும் பெண்களும் மட்டும் அல்ல, நவீன வாழ்க்கைச் சிந்தனை நமக்குத் தந்துள்ள ஆண்- ஆண் உறவு, பெண் - பெண் உறவு முதலானவைகளையும் உள்ளடக்கிய வாழ்க்கை முறை அல்லவா ஒரு ஆரோக்கிய சமூகத்தின் வாழ்க்கை முறை. யார் யார் காதலிப்பது என்பது சட்டத்துக்குள்ளோ சமூக வரையறைக்குள்ளோ கொண்டு வரப்படுவது மனப்பிறழ்வுகளை உருவாக்குமேயன்றி, இசைவுகளை உருவாக்க ஒருபோதும் பயன்படாது.

சங்கப் புலவர்கள் கைக்கிளை, பெருந்திணை பற்றிப் பாடி இருக்கிறார்கள். தொகுக்கும் காலத்தில் அவை விடப்பட்டு இருக்கின்றன. காரணம், ஒரு தலைவர், ஒரு மனைவி அவன் குழந்தைகள் என்ற வரையறை கொண்ட குடும்பங்களை உருவாக்குவதே தொகுப்பு காலத்தின் அரசியலாக இருந்திருக்கிறது. குடும்ப உன்னதத்தைச் சொல்லிச் செல்லும் பாடல்களாலேயே சங்க இலக்கியக் காதல் கவிதைகள் நிரம்பி இருக்கிறது. அதாவது தொகுக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப வாழ்க்கை முறையைக் காப்பாற்றும் கடமையை இந்தக் கவிதைகள் ஏன் ஏற்றன? அரசு அதிகாரத்தை, நிலைநிறுத்தும் கடமையை இவை ஏற்றன. குடும்பச் சிதைவு என்பதும், தனிநபர் குடும்பம் என்பதும் அதிகாரங்களை அசைப்பவை. அதனால்தான் ஆண்- ஆண் காதலையும், பெண்-பெண் காதலையும் அதிகாரங்கள் மூர்க்கமாக எதிர்க்கின்றன. தனி மனிதனின் பால் ஈடுபாட்டை அரசுகளும், சட்டங்களும் தங்கள் கைவசமே, அன்று முதல் இன்றுவரை வைத்திருப்பதன் காரணம் வைதீகம், வர்ணாஸ்ரமம் இவை காப்பாற்றும் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதற்கே ஆகும்.

மனிதரை மனிதர் இழிவுபடுத்தும், தமிழரைத் தமிழரே இழிவுபடுத்தும் போக்கு சங்க காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. தீண்டாமை இருந்ததா என்பதை விடவும், தீண்டாமைக்கு மிக அருகில் வந்து நிற்கிற அழுக்குச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறியதற்கான சுவடுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. அதுவும் செம்மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது (இதற்கும் கூட ஒரு மாநாடு நடத்தலாம்).

அடியோர், வினைவலர் என்ற இருவகை மக்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உரையாசிரியர் இளம்பூரணர் அடியோர்க்குக் குற்றேவலர் என்று பொருள் சொல்கிறார். வினைவலர் என்பதுக்குத் தொழில் செய்வோர் என்கிறார். சோமசுந்தர பாரதியார் அடியோரை ஏவல் பணியாளர் என்றும் வினைவலரைக் கூலித் தொழிலாளர் என்றும் பொருள் உரைக்கிறார். பொருள் ஓரிடத்தில் குவிந்து விவசாயக் கூலித் தொழிலாளிகளை உருவாக்கி இருக்கிறது. தொழில் அறிவு இல்லாதவர்கள் ஏவலர்களாகி இருக்கிறார்கள். இனக் குழுக்கள் கரைந்து அரசு மக்கள் உருவாகிக் கொண்டிருந்தார்கள் என்பதன் வெளி உருவம் இது.

முன்னர் நாம் குறிப்பிட்டிருந்த படி, மன்னர்கள் பதவி ஏற்கும்போது, மகுடம் சூடும்போது, மங்கல வாத்தியமாக ஒலித்த பறை தாழ்ந்த கருவியாக மாறியது. பறை முழக்கிய பறைக் கலைஞர் இழிந்தவர் ஆயினர்.

துடி என்னும் தோல் கருவிகளை இசைத்தவர்கள் துடியர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்களைப் புலையர் என்கிறது சங்கப்பாடல்.

துடி யெறியும் புலைய...
எறிகோல் கொள்ளும் இழிசின... 
(புறநானூறு)

இழிபிறப்பாளன் கருங்கை சிலப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி (புறம்)

இதே காலத்தில் துணிவெளுக்கும் தொழிலைச் செய்த வண்ணாத்தி எனப்படும் தொழிலாளியை புலைச்சி, புலைத்தி என்கிறது சங்கப்பாடல்.


உழைக்கும் வர்க்கம் பற்றிய இந்தக் கண்ணோட்டம் மேலும் அகன்று விரிந்து, அவர்கள் சமூக நிலைமையை மேலும் கீழிறக்கியது. தொல்காப்பியர், “அடியோர் பாங்கினும் வினை வலர் பாங்கினும், கடிவரையில் புறத்து என்மனார் புலவர்” என்கிறார். இதன் பொருள், இந்த அடியோர், வினைவலர் (மற்றும் உழைக்கும் வர்க்கம்) காதல் திணையாகிய அகன் ஐந்திணைக்கு உரியவர்கள் இல்லை என்பதாகும். இளம்பூரணர் மிக ஆனந்தமாக அறிவார்த்தமாக விளக்கம் வரைகிறார்.

1. அறத்தின் வழாமல் (தவறாமல்) வாழ முடியாதவர்கள் அவர்கள்.
2. பொருள் தத்துவம் அவர்களுக்கு இல்லை.
3. இன்பத்துள் வழாமலும் அவர்கள் வாழமுடியாது.
4. அவர்கள் நாணுக்குறைபாடு (நாணம் அற்ற தன்மை) உள்ளவர்கள்.
5. குறிப்பு அறிய முடியாதவர்கள் அவர்கள். அதாவது நுணுக்கம் அற்றவர்கள்.
6. வேட்கை (ஆசை, காமம்) வழியே சாரக் கருதுபவர்கள்.
7. இனிமையான இன்பத்தை நடத்துபவர்கள் இவர்கள் இல்லை. இவர்களால் இனிய இன்பம் நடத்த முடியாது.

ஆகவே இவர்கள் (உயர்ந்த) ஐந்திணை ஒழுக்கத்துக்கு உரியவர்கள் இல்லை. இவர்கள் புறப் பொருளுக்கே உரியவர்கள்.

இதன் அர்த்தம், அன்றைய சங்க இலக்கியம், மேட்டுக்குடி இலக்கியம், மேலோர் இலக்கியம் என்பதே ஆகும்.

இப்போது நமக்கு எழும் கேள்வி, சங்கத் தமிழ் இலக்கியம், சகல தமிழர்களையும் அனைத்து மேல், கீழ் மக்கள் வாழ்க்கையையும் தழுவி நடந்த இலக்கியம்தானா என்பதே ஆகும். இல்லை என்பதே பதில்.

டாக்டர் மாரியப்பன் (தமிழக வரலாறு, 1984) இப்போது ஒரு தெளிவை நமக்குத் தருகிறார். “இழிகினர் என்றும் இழி பிறப்பாளர் என்றும், அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல் தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது. புலையன், புலைச்சி என்பது இழிசொல். பறையர், துடியர், பாணர் ஆகியோரும் புலையர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

‘புலையர் பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டனள்’ என்கிறது நற்றிணை.

மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி (நற்றிணை)

புலையத்தார் யாழின் (கலி)

மட்டும் அல்லாமல், சுடுகாடு காக்கும் வெட்டியான் இழிகினர் புலையன் என்றே அறியப்படுகிறார். விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் ‘கடைசியர்.’ அதாவது கடைசியாக வைக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இந்தக் கடைசியர்கள் அடிமைகளுக்குச் சற்று நெருங்கி இருக்கலாம். அதாவது பண்ணை அடிமைகள் என்பதற்குப் பெரிதாக இவர்கள் வேறுபட்டிருக்கவில்லை என்கிறார் நீலகண்ட சாத்திரியார்.

சங்கத் தமிழ் இலக்கியம், மேட்டுக்குடி இலக்கியம். உடலுழைப்புத் தொழிலாளர்கள் இலக்கியப் பாத்திரங்களாவதில்லை. ஆகி இருக்கும் குறளர் போன்ற உடம்பு குறைபட்டோர் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் காதல் கேலி செய்யப்பட்டு, காதல் திணைக்கு வெளியே நிறுத்தப்படுகிறது. மனித சாதி, மேல் என்றும் கீழ் என்றும் கீழ்மைப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் காலத்து உன்னத இலட்சியம் என்னவாக இருக்கும்?

அண்மையில் ராமானுஜம் (மாண்ட்டே மொழிபெயர்ப்பாளர்- கலை, சமூகச் சிந்தனையாளர்) என்னிடம் கேட்ட கேள்வி இது. சாதிப் பிரிவுகளும், வர்க்கப் பிளவுகளும் கொண்ட அக்காலச் சமூகத்துக்கு எந்த லட்சியம் நோக்கமாக இருந்திருக்கும்? நமக்கு இன்றைய வாழ்வில் சமத்துவமும், சுதந்திரமும், லட்சியம். சங்கத் தமிழர்க்கு?

சிந்திக்க வேண்டி இருக்கிறது.

0 கருத்துகள்: