, ,

ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?

ஓசைப்படாமல் நடந்து கொண்டிருக்கிறது ஒரு வேலை.

விழுப்புரம், தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ள சில ஊர்களில் மாதத்திற்கு ஒரு முறை சில ஜாதிச் சங்கங்கள், திருமண மண்டபங்களில் இளைஞர்களுக்கு மட்டும் என கூட்டம் நடத்துகின்றன. அந்தக் கூட்டங்களில் படித்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்கள் ஜாதி அமைப்புகளின் பலத்தைப் பற்றியும், சங்கத்தினை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் ‘மூளைச் சலவை’ நடக்கிறது.


எங்க கட்சியில் ஒவ்வொரு மாதமும் இளைஞர்களுக்கு மட்டும் கூட்டம் நடத்துவாங்க. அதுல ஒவ்வொரு இளைஞனும் மத்த கட்சியில் இருக்கும், எங்க ஜாதிப் பசங்களை, எங்களுடைய கட்சியில் சேர்க்கணும்னு சொல்வாங்க. கல்லூரியில் எங்களுடைய பலம்தான் ஓங்கி இருக்கணும். எங்களில் ஒவ்வொரு இளைஞரும் கிராமத்தில் குறைந்தது நூறு ஓட்டுகளை பெற்றுத் தரவேண்டும் என்பார்கள். அப்படி கட்சிக்கு உழைக்கும் இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியப் பதவியும், தேர்தலில் நிற்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எங்களுக்கு நடக்கின்ற கூட்டத்தில் கூறுவார்கள்" என்கிறார், பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ. படிக்கும் மாணவர் ஒருவர்.


இந்தக் கூட்டங்களில் தங்கள் ஜாதிப் பெருமையைப் பேசுவதோடு மற்ற ஜாதிக்களைப் பற்றி, குறிப்பாக தங்களது எதிரிகள் என அவர்கள் கருதும் ஜாதியினர் மீது விரோதம் ஏற்படும் வண்ணம் கருத்துகள் விதைக்கப்படுகின்றன.நாங்க, ‘அவங்க’ இருக்கிற பகுதியில் போய் விளையாடக் கூடாது... அப்படி மீறி அவங்ககூட விளையாடப் போனா, ஊர்ல பெரியவங்க பார்த்துட்டா கண்டிப்பாங்க. சில சமயம் கடுமையா அடிகூட விழும். ஊர்ல நாங்க எப்பவும் தனி டீமாதான் இருப்போம், ‘அவங்க’ கூட சேரமாட்டோம்" என்கிறார், பத்தாம் வகுப்பு படிக்கும் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) .


தென் மாவட்டங்களில் ஜாதி தொடர்பான விஷயங்களில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறோம். இங்கு, பள்ளிக்கூடங்கள் கூட ஜாதி உணர்வோடுதான் இயங்குகின்றன. ஊர் என்றும், சேரி என்றும் கிராமங்கள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றன. இங்குள்ள சிறுவர்களும் அங்குள்ள சிறுவர்களும் தனித்தனியாக வளர்கிறார்கள். ஒன்றாகப் படிக்க முடியவில்லை. ஒன்று சேர்ந்து விளையாட முடியவில்லை. பல அரசுப் பள்ளிகளில் கூட தலித் மாணவர்களும், தலித் அல்லாத மாணவர்களும் தனித்தனியாக அமர வைக்கப்படுகிறார்கள்" என்கிறார், எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தலைமுறை ஜாதிய உணர்வோடும், மற்ற ஜாதிகள் மீதான விரோத மனப்பான்மையோடும் உருவாகி வருகின்றன. இந்த விரோதமும் வெறுப்பும் அவ்வப்போது வெடிப்பாக வெளிப்படுவதுதான் ஆங்காங்கே தலைதூக்கும் ஜாதி மோதல்கள். இதற்குக் காரணம் ஜாதி சங்கங்கள்.

உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் இவற்றின் இலக்கு தேர்தல். தேர்தலில் கூட்டணிப் பேரங்கள் நடத்தவும், இடங்களைக் கைப்பற்றவும், முடிந்தால் யாரோடாவது ஒட்டிக்கொண்டு ஆட்சியில் அமரவும், அப்படி அமர வாய்ப்புக் கிடைத்தால் அதில் தங்கள் குடும்பத்தினரைக் கொண்டு உட்கார்த்தவும் ஜாதியைப் பயன்டுத்துகின்றன இந்த அமைப்புகள். தேர்தல் நெருங்க நெருங்க இவை இத்தனை நாள் உள்ளுக்குள் மறைத்து வைத்திருந்த ஆசைகளை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றன. 


ஜாதி அடிப்படையில் செயல்படும் அமைப்புகள் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை ஏன் நடத்துகின்றன? தங்களின் பலத்தைக் காண்பிப்பதற்காக, தேர்தலில் கூடுதல் சீட்டுகள் கேட்டு பெரிய கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கு, பெரிய கட்சிகளை மிரட்டுவதற்காக இவற்றை நடத்துகிறார்கள். எனவே, அதற்கெல்லாம் அனுமதி வழங்கக்கூடாது" என்கிறார், ஜாதிக் கலவரங்கள் குறித்து ஆய்வு செது பிஎச்.டி. பட்டம் பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன்.

 இவர்களது பதவி ஆசைகளுக்காக இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதுதான் கொடுமை.  இளைஞர்கள் குறைந்தது  இரண்டு   விதங்களில் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஒன்று: வெறுப்பு அரசியலின்  விளைவுகள். வெறுப்பு அரசியலைப்  பின்பற்றியவர்கள்,  இறுதியில் அதற்கே பலியானதை வரலாற்றில் நெடுகப்  பார்க்கிறோம்.  யூதர்கள் மீது நாசிகள் வளர்த்த வெறுப்பு, உலகப் போரில் வந்து முடிந்தது. அதன் இறுதியில் கணக்குப் பார்த்தால், பல்லாயிரக்கணக்கான  ஜெர்மானியர்கள் இறந்து போனார்கள்.  அவர்களது குடும்பங்கள் யார் எங்கிருக்கிறார்கள் என அறிந்துகொள்ள  இயலாத வண்ணம் சிதறிப் போயின. அறிவியலிலும் கலையிலும் மிகத் திறமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த அந்த மக்கள், பரிதாபமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்கள்.  அவர்கள் தேசத்தை, வல்லரசுகள் துண்டாடிப் பங்கு போட்டுக் கொண்டன.


ஜெர்மனியின் கதை மட்டுமல்ல, வெறுப்பு அரசியல் தலையெடுத்த எல்லா இடங்களிலும்- ஆப்ரிக்காவில், மத்திய கிழக்கில், இலங்கையில், பாகிஸ்தானில்- எல்லா இடங்களிலும் இதுதான் நடந்தது.


ஆனால், அங்கெல்லாம் தலைதூக்கி நின்ற வெறுப்பு அரசியல் என்பது இரு இனத்திற்கிடையே, அல்லது மதத்திற்கிடையே மோதலாகப் பரிணமித்தது. இங்கு வெறுப்பு அரசியல் தலைதூக்குமானால், அது தமிழர்களே தமிழர்களைத் தாக்கும் கொடுமையாக முடியும். இந்த அவலம் தமிழ்ச் சமூகத்திற்கு, தமிழ் இளைஞர்களுக்கு நிகழ்ந்து விடக் கூடாது.

இன்னொரு பாதிப்பு: தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுதல். இளைஞர்கள் அவர்களது தோல்விகளுக்கு, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு யாராலோ பறிக்கப்பட்டதுதான் காரணம் என நம்ப வைக்கப்படுவதால், அவர்கள் தங்களைத் தாங்களே சுய ஆய்வு செய்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதே அவர்களுக்குக் கடைசிவரை தெரியாமல் போய்விடும். இதனால், வெற்றி பெற்றவர்கள் மீது எப்போதும் சந்தேகமும் தங்கள் மீது ஓர் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு, முன்னேற்றம் இல்லாமலே முடங்கிப் போகிறார்கள். 


சமூக யதார்த்தங்கள் ஜாதி அமைப்புகளால் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக, குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் பெரும் வீழ்ச்சி கண்டது. இந்த வீழ்ச்சியை அரசுகள் - குறிப்பாக மத்திய அரசு - பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகள் விரைவுபடுத்தின. இதன் விளைவாக பாரம்பரியமாக விவசாயத்தையும், சிறு வணிகத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானார்கள். ஆனால், ஜாதிச் சங்கங்களால் உருவான கட்சியினர் இந்தக் கொள்கை முடிவுகளை எடுத்த அரசில் அங்கம் வகித்தார்கள். இந்த யதார்த்தங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக காதல் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் இவற்றை எதிர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. அப்படிச் செய்வதன் மூலம் தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமையை மறுக்கிறார்கள். அதாவது ஜாதியைத் தூக்கிப் பிடிக்கிற முனைப்பில் பெண் உரிமை என்பது கைவிடப்படுகிறது.



ஒரு தலைமுறையினரிடம் வன்மத்தை விதைப்பது, சமூக நல்லிணக்கத்தைச் சிதைப்பது, தமிழர்களை தமிழர்களுக்கு எதிராக நிறுத்துவது, வாக்கு வங்கி அரசியலை வலுப்படுத்துவது, பெண் உரிமையை மறுப்பது, பழங்காலத்துச் செதிகளை மிகைப்படுத்தி ஆண்ட பரம்பரை என்ற போதையில் இன்றைய சமூக யதார்த்தங்களை மரத்துப் போகச் செய்வது இவையெல்லாம் ஜாதிச் சங்கங்கள் சமூகத்திற்கு அளித்திருக்கும் ‘பரிசுகள்’. இதுபோன்ற பல தீமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?


தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால், ஜாதிய அமைப்புகளை தடை செய்யவேண்டும். ஜாதிய அமைப்பை உருவாக்கி, அதைப் பலப்படுத்தி அதன் பிறகுதான் ஜாதிக்கட்சியைத் தொடங்குகிறார்கள். எனவே, ஆரம்பத்திலேயே ஜாதிய அமைப்புகளை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்கிறார் போலீஸ் டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன்.


ஆனால், இருக்கிற அதிகாரங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக கட்சிகளையும் அமைப்புகளையும் மேல் ஜாதியினர் வைத்திருக்கின்றனர். கீழ் ஜாதியினர் என்று சொல்லப்படுபவர்கள், புதிய அதிகாரங்களைத் தேடுவதற்காக அமைப்புகளையும் கட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். எனவே, மேல் ஜாதியினரின் அமைப்புகளையும் கட்சிகளையும் தடை செய்வதில் தவறில்லை. புதிய அதிகாரங்களைத் தேடுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகளைத் தடை செய்யக்கூடாது" என்கிறார், பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவம்.


ஏறத்தாழ இதேபோன்ற கருத்துகளை பேராசிரியர் கல்விமணியும் எதிரொலிக்கிறார். ஜாதிக்கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு கருத்து உடன்பாடு இல்லை. நாங்கள் இருளர் சங்கம் வைத்திருக்கிறோம். நாளைக்கே இது அரசியல் கட்சியாக மாறலாம். இருளர் மக்களின் பிரச்சினைகளை யாருமே பேசுவதில்லை. அதனால், அந்த மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக அந்த அமைப்பு தேவைப்படுகிறது" என்பது அவரது வாதம்.

தேர்தலின்போது பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை விதிகளை வகுத்துள்ள தேர்தல் ஆணையம் அந்த விதிகளில் முதல் விதியாக ஜாதி, மொழி, மத ரீதியாக ஏற்கெனவே இருந்துவரும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் விதமான எந்தச் செயலையும் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ மேற்கொள்ளக் கூடாது எனக் கூறுகிறது. ஆனால், அப்படி நடந்துகொள்ளும் கட்சிகள் தடை செய்யப்படும் என்பதற்கான குறிப்போ, தடை செய்யப்பட்ட வரலாறோ இல்லை. இது ஜாதி அமைப்புகளைத் தடை செய்வது நடைமுறையில் முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜாதிக்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஜாதிக்கட்சிகளை தடை செய்வது நல்ல விஷயம்தான். ஆனால், தேர்தல் ஆணையம் உறுதியோடு இருந்தால் அதைச் செய்ய முடியும். இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிற கட்சிகளை ஜாதிக்கட்சி என்ற பெயரில் தடை செய்தால், அந்த மக்கள் பெரிய கட்சிகளில் சேர்ந்து விடுவர். அங்கு அவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடைக்காது" என்கிறார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் சேர்த்தல் கோட்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் பெ.ராமஜெயம்.

 அப்படியானால் என்னதான் தீர்வு?


ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை உத்தரவாதம் செய்யப்படும்போது, இடைத்தட்டு ஜாதியினரின் ஆதிக்கம் குறையும். எனவே, மேற்குவங்கத்தைப்போல தமிழ்நாட்டிலும் சரியான நிலப்பங்கீட்டு முறை கொண்டுவர வேண்டும். தலித் மக்களுக்கான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும். வன்னியர்களுக்கான மண்ணவேடு கிராமங்களையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்கிறார், பேராசிரியர் தொ.பரமசிவம்.


எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், காதல் திருமணம் ஆகிய இரண்டும்தான் இன்றைய பிரச்சினை. வன்கொடுமை சட்டம் கட்டாயம் தேவை. அது இன்னும் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். காதல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாதது. தடுக்க முடியாதது. இதற்கு ஆதரவான கருத்துகளை முன்வைப்பதன் மூலமாகவும், விவாதங்கள் நடத்துவதன் மூலமாகவும் ஆதிக்க ஜாதியினரின் பிற்போக்குக் கருத்துகளைத் தனிமைப்படுத்த வேண்டும்" என்கிறார், பேராசிரியர் கல்வி மணி.


ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதிக்கப்படுபவர்களுக்குப் போதிய பாதுகாப்பைத் தந்திருக்கிறதா?


இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் புகார்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது, தண்டனை விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வழக்குகள் 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள், சில சமயம் 10 ஆண்டுகள் கழித்துகூட, நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து, சாட்சிகளுக்கு அச்சம்பவம் குறித்து எந்தளவுக்கு நினைவு இருக்கும்? மேலும் மிரட்டல், பணபேரம் போன்ற நடவடிக்கைகள் மூலம் சாட்சிகள் பின்வாங்க வைப்பதும் நடக்கிறது. 3 மாதங்களில் அல்லது 6 மாதங்களில் விசாரணைக்கு வந்தால், நிச்சயம் நியாயம் கிடைக்கும். நான்கூட, இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் 47 நாட்களில் இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனவே, முடியாத காரியம் எதுவுமே இல்லை" என்கிறார், ஜான் நிக்கல்சன்.


ஜாதி போன்று பல நூறாண்டுகளாக சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் விஷயங்களை சட்டம், விதிகள் போன்றவற்றால் மட்டும் மாற்றிவிட முடியாது. ஜாதிகள் இருக்கின்றன என்பதைவிடக் கொடுமையான விஷயம், அவை அமைப்பு ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு, அந்த அமைப்புகள் அரசியல் லாபங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன என்பதுதான். எனவே, அதைக் குறித்த விழிப்புணர்வு, குறைந்தபட்சம் எச்சரிக்கை உணர்வாவது இளைய தலைமுறைக்குத் தேவை. 
 aruppukkottaitown.blogspot.in