, ,

இதுவும் அகிம்சை போராட்டமா?

பிரிவு : சம்பவங்கள்--> மதக் கலவரம்

´திச் குவாங் டக்´ [Thích Quàng Đức] பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதப் போராட்டத்தில் தன் உயிரையே ஆயுதமாக வைத்து போராடிய திச் குவாங் டக் [Thích Quàng Đức] நம் கண் முன்னே வரும் போது கூட, ´எரியும் உடலோடுகூடிய காட்சி´யே நினைவுக்கு வருகிறது. உலகத்தையே உலுக்கச் செய்த மரணமல்லவா அது....

மதங்களுக்காக உலகில் இதுவரையில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எத்தனையோ மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ´திச் குவாங் டக்´ கோ தன் மதத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் உலகத்திற்கு அம்பலப்படுத்துவதற்காகவும் அந்நாட்டு அரசாங்கத்தாரை பணிய வைக்கவும் சில கோரிக்கைகளோடு தன்னையே எரித்துக் கொண்டவர். ஏன் இப்படியொரு கொடூரம் நிகழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் ´திச் குவாங் டக்´ என்பதை பாருங்கள்.

தென் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த புத்த மத துறவி ´திச் குவாங் டக்´. மகாயானம் [Mahayana] பிரிவைச் சேர்ந்தவர். அவர் காலத்தில் ´கோ தின் தியம்´ [Ngô Đình Diệm] என்பவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். இவர் கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்த கத்ரோலிக்க பிரிவு [Catholics]தென் வியட்நாமில் 70-இல் இருந்து 90-விழுக்காடு வரை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். கத்ரோலிக்க பிரிவில் [Catholics] தீவிர ஈடுபாடுடைய ´கோ தின் தியம்´ [Ngô Đình Diệm] தன் அதிகாரத்தை தவறான முறையில் செயல்படுத்திக் கொண்டிருந்தார். அரசாங்க பதவி உயர்வுகள் கிறிஸ்தவர்களுக்கே அளிக்கப்பட்டது.

பொது நிலப்பங்கிடு, வரிவிலக்கு, தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசாங்க சலுகைகள் அனைத்தும் கிறிஸ்தவர்களுக்கே. 90-விழுக்காடுள்ள மக்களுக்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் உரிமைகள் மறுக்கப்பட்டன.´கோ தின் தியம்´ [Ngô Đình Diệm] சர்வாதிகாரம் புத்த மதத்திற்குள் நுழையும் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு சலசலப்புகளே இருந்தன.

08-ஆம் தேதி மே மாதம் 1963-இல் ´வேசாக்´ [Vesak] என்ற இடத்தில் புத்தர் பிறந்த தினம் அன்று கொடி ஏற்ற ஊர்வலமாக சென்ற போது...,´புத்த கொடியை ஏற்றக்கூடாது´ என்று ´கோ தின் தியம்´ அரசாங்கம் தடை விதிக்கிறது. அதனால் புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே கலவரமாக மாற அதில் 9-பேர்கள் அந்த இடத்திலேயே இறக்கிறார்கள். இந்நிகழ்வு புத்த மதத்தைச் சேர்ந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அடக்குமுறை மதக்கலவரமாக மாறுகிறது.

அதைத் தொடர்ந்து புத்தமதத்தை சார்ந்தவர்கள் மீது அரசாங்கம் தனது அழுத்தத்தை அதிகரிக்கிறது. புத்த துறவிகளுக்கு பலவிதங்களில் பாதிப்புகளையும் அரசாங்கம் ஏற்படுத்துகிறது. புத்த பிட்சுக்களை கொடுமைப்படுத்துவதைக் கண்டும், வியட்நாமில் நடக்கும் அடக்குமுறையில் இருந்தும் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று உலக மக்களின் கவனத்தை ஈர்க்க தன்னையே எரித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார் திச் குவாங் டக்´.´சைகோன்´ [Saigon] என்னும் இடத்தில் நடுத்தெருவில் 11-ஜீன் மாதம் 1963-இல் பொது மக்கள் முன்னணியில், புத்த பிட்சுக்கள் பெட்ரோலை திச் குவாங் டக் மீது ஊற்ற.., தன்னையே தீ வைத்து எரித்துக் கொள்கிறார்.

எந்த அசைவும் இன்றி எந்த கதறலும் இன்றி அமைதியாக இருக்க உடல் முழுவதும் எரிந்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக பிணமாகசாய்கிறார் ´திச் குவாங் டக்´.நெஞ்சம் உறைய திகிலோடு வீடியோவில் ஓடும் காட்சிகளை இன்றும் மக்கள் அதிர்வோடு பேசவைக்கும் மரணமாக ´திச் குவாங் டக்´ இன் முடிவு இருக்கிறது. இதுவும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து அகிம்சை முறையில் போராடிய போராட்டம் தானா?அகிம்சை போராட்டத்தின் தத்துவம் என்ன?

"நமது அமைப்பின் தார்மீக போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை எதிராளி உணர்ந்து மனம் திருந்தி நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரையில் அகிம்சை முறையில் கிளர்ச்சி செய்வதே சத்தியாக்கிரகப் போராட்டத்தின் அர்த்தம். எதிரி நம்மை எப்படி கொடுமைப்படுத்தினாலும், இழிபடுத்தினாலும், அடித்தாலும், திட்டினாலும், உயிரை எடுக்க முற்பட்டாலும் நம் தைரியத்தை மட்டும் இழந்துவிடாமல் அகிம்சையை மன உறுதியோடு விடாமல் நிற்க வேண்டும். எதிரி மீது எந்த வெறுப்பு உணர்ச்சியையும் நம் உள்ளத்தில் உருவாக்கிவிடக் கூடாது."

´திச் குவாங் டக்´ இதையே செய்தார். எதிராளியை வதைக்கவில்லை. தன்னையே எரித்துக் கொண்டார்.இந்நிகழ்வு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. வியட்நாமில் நடந்த அட்டுழியங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தன.

"புத்த மதத்தை சேர்ந்த மக்கள் மீதும் துறவிகள் மீதும் எந்த தாக்தல்களையும் நடத்த மாட்டோம்" என்று ´கோ தின் தியம்´ உறுதியளிக்கும்படி இச்சம்பவம் அமைந்தது.´திச் குவாங் டக்´ இன் கருகிய உடலை சோதனை செய்த போது உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்தும், இதயம் மட்டும் எந்த பாதிப்பும் அடையாமல் இருந்தது. இவை குறித்தும் பரபரப்பாக மக்களிடம் பேசப்பட்டது.

புத்த துறவிகள் ´திச் குவாங் டக்´ இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ´கோ தின் தியம்´ ஜனாதிபதியின் உடன் பிறந்த தம்பி ´கோ தின் ஹு´ [Ngô Đình Nhu] க்கு, ´திச் குவாங் டக்´ இன் இதயத்திற்கு இருக்கும் புகழைக் கண்டு பலாத்தாரமாக அவர்களிடம் இருந்து அபகரிக்கிறார். இச்சம்பவம் மீண்டும் புத்த துறவிகளிடமும், மக்களிடமும் ஆவேசத்தை கொடுத்தன.´திச் குவாங் டக்´ இதயத்தை தங்களிடம் திரும்பி அளிக்க வேண்டும் என்று பல துறவிகள் ´திச் குவாங் டக்´ போன்றே தங்களை எரித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலும் பல துறவிகள் கொல்லப்பட்டனர். எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.´திச் குவாங் டக்´, ´கோ தின் தியம்´ தங்கள் தங்கள் மதங்களை காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருவர் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாதே... என்கிறார். மற்றவரோ புத்த மதத்தை ஒழித்துக்கட்டி கிறிஸ்தவ மதத்தை நுழைக்க முயல்கிறார்...."மக்களுக்கு மதம் சந்தோஷத்தை அளிப்பதாகப் ´பிரமை´ காட்டுகின்ற மதத்தை ஒழிக்க வேண்டுமென்று கோருவது மக்களுடைய உண்மையான சந்தோஷத்தைக் கோருவதாகும்" என்பார் கார்ல் மார்க்ஸ். அந்நிலை உலகில் என்று வருமோ அன்று மனிதர்கள் மதத்தின் பேரால் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தும் குணத்தை விட்டொழிப்பார்கள்...

அதுவரையிலும் ´திச் குவாங் டக்´, ´கோ தின் தியம்´ போன்றவர்கள் உலகில் இருந்து கொண்டே இருப்பார்கள்.

0 கருத்துகள்: