, ,

உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

பிரிவு : சமூகம்--> பொருளாதாரம்

மென்று முழுங்கும் சமாச்சார தட்டுப்பாடு சங்கதியில் என்ன செய்வதென்று தெரியாமல் ஐ.நா உணவு முகமை தடுமாறுகிறது. மேலை நாடுகளிலும் உணவு பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அத்யாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், விலை ஏற்றத்தில் உணவு பொருட்கள் கிடைத்தாலும் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் உணவு தட்டுப்பாடு வரக்கூடும் என ஐ.நா உணவு முகமை எச்சரிக்கிறது.

சீனாவின் கோதுமை பயிரிடப்படும் 140-லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 50- லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 25-லட்சம் பொதுமக்களும், 27-லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளனர் என்றும் ஐநாவின் உணவு முகமை கூறுகிறது.

சீனாவில், ஷான்டாங் பகுதிகளில் 200-வருடங்களில் ஏற்படாத அளவு வறட்சியும், மற்ற முக்கிய விவசாயப் பகுதிகளில் 60-வருடங்களுக்கு வராத வறட்சியும் ஏற்பட்டிருப்பதை எப்படி சீன அரசாங்கம் சரிகட்டப் போகிறதோ...

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமையை மட்டும் நம்பி இருக்கும் நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

ஏற்கனவே ஆசியாவில் உணவு பஞ்சம் ஆரம்பித்துவிட்டாலும் அரசு மறைத்து வைத்திருக்கிறது. முதலில் வெங்காயம், பூண்டு, கோதுமையில் தொடங்கிய தட்டுப்பாடு பட்டியல் நீண்டுக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் விடுங்கள்...

இந்தியாவில் உணவு பஞ்சம் வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தியாவின் உணவு உற்பத்தி, ஏதோ விதையை தூவினோம், கதிரை அறுத்தோம் என்கிற பாணியில் விவசாயம் இருந்தது.

1960-இல் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட போது, அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளிடம் இருந்து மில்லிடன் டன் கணக்கில் உணவு தானியங்களை இறக்குமதி செய்து பட்டினிச் சாவை தவிர்த்தது. இருந்தாலும் பீகார் போன்ற பகுதிகளில் பட்டினி சாவை தடுக்க முடியவில்லை என்றும், பட்டினி சாவு கணக்கை இந்தியா மறைத்துவிட்டது என்றும் குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இந்த அவலத்திற்கு பிறகே இந்தியா விழித்துக் கொண்டது. விவசாயத்திற்கு விஞ்ஞானத் தொழில் நுட்பத்தை உபயோகித்து உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

1970-க்களில் நவீன முறை விஞ்ஞான விவசாய துறையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது. Mexican Dwarf Wheat என்ற கோதுமை வகை விதை உருவாக்கப்பட்டு பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் பயிர் செய்து அதிக கையிருப்பும் சேமிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களில் நிலத்தின் குடிநீர் பற்றாக்குறை எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

தொழிற் புரட்சி, விஞ்ஞான புரட்சி, பசுமை புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சியை சந்தித்துவிட்டோம். நிலத்தடி குடிநீர் வறட்சியை இனி உலகம் சந்தித்தால் மற்ற புரட்சிகளையெல்லாம் ஓரங்கட்டி விடும் குடிநீர் வறட்சி.

என்ன செய்யப் போகிறோம் வயிற்றுப்பாட்டுக்கு?

0 கருத்துகள்: