, ,

சாதிக்கட்சி தேவையா?


தமிழக வரலாற்றில் வலங்கை-இடங்கைப் பூசல்கள் சோழர்காலம் தொட்டு வழக்கில் இருந்துள்ளன. இப்பூசல்கள் தத்தம் சாதிகளின் உரிமைகள் பாதிக்கப்படும்போதும், பிறரால் மீறப்படும்போதும் நடந்தன. சமுதாயத்தில் சமநிலையில் உள்ள சாதிகள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரண்டும் போராடியுள்ளன.

சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்தவர்கள் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாகக் கருதலாம். அன்றும் பறையரும், பள்ளியும் (வன்னியர்) எதிரெதிர் குலங்களில் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலங்கை&இடங்கை வகுப்பினரிடையே பல பெரும் பூசல்கள் விளைந்து வந்ததை முதலாம் குலோத்துங்க சோழனுடைய திருவரங்கக் கல்வெட்டின் மூலம் அறியலாம். வலங்கை இடங்கைக் கலகம் அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில் நடைபெற்றது (கி.பி. 1071). இக்கலகம் நடைபெற்றபோது கலகக்காரர்கள் கிராமத்தைச் சுட்டு எரித்தனர். கோயில்களை இடித்துத் தள்ளினர். அவர்களைத் தொடர்ந்து கொள்கைக்காரர்கள் கோயில் சிலைக0ளையும், கோயில் பண்டாரத்தையும் சூறையாடினர். (தர்மபுரி மாவட்டம் நத்தம், கொண்டப்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களின்மீது 2012ல் நடத்தப்பட்ட தாக்குதலை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்).

கொங்குப் பகுதியில் 24 நாடுகள் உள்ளன. இவற்றில் வலங்கை, இடங்கைச் சாதிகளின் பல்வேறு வேறுபாடுகள் கடந்த காலங்களில் விரிவானதாக இருந்தன. இன்று வலங்கை இடங்கைப் பிரிவுகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டாலும், தூக்கி நிறுத்துவதற்கு இன்று சாதித்தலைவர்கள் தயாராகவே உள்ளனர்.

மேற்கண்ட வலங்கை இடங்கைப் பிரிவுகளில் வலங்கையில் 98 சாதிகளும், இடங்கையில் 98 சாதிகளும் இடம்பெற்றன. இச்சாதித் தொகுப்பைப் போன்றே தற்போது பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாற்பதுக்கும் மேற்பட்ட சாதித் தலைவர்களை ஒன்றிணைத்து அவரது தலைமையில் ‘ஒரு சாதிக் கூட்டணி’யை உருவாக்கி மேற்கண்ட வலங்கை இடங்கைப் பூசல்கள் போன்றே செய்து வருவதை நாம் காண முடிகிறது. இவருடைய நோக்கம் வன்னிய இனத்தார் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பதே. இதை அவர் நேரடியாகவும் பகிரங்கமாகவும் அறிவிக்கத் தவறவில்லை.

தமிழகம் நீண்ட காலமாகவே பிறமொழி பேசும் சமூகத்தின் குடியேற்றப்பகுதியாக இருந்து வருகிறது. குடியேற்றப் பகுதியாக மட்டுமல்ல குறியேறியவர்களின் ஆதிக்கப் பகுதியாகவும் இருந்தன. இந்தியாவில் தமிழ்நாட்டைப் போல் எந்த மாநிலமும் இத்தகைய குடியேற்றத்துக்கோ, வெளியார் ஆதிக்கத்துக்கோ நீண்ட நெடுங்காலமாக ஆட்பட்டதில்லை. கடந்த இருபது நூற்றாண்டுகளாகத் தமிழர்களைத் தமிழர்களே ஆண்டகாலம் மிகக் குறைவு.

சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர்கள் யார் என இன்னமும் ஒரு சீரான கருத்து உருவாகவில்லையெனினும் அவர்கள் தமிழர்கள் அல்லர் எனக் கொள்ளலாம். அதன்பின் வந்த பல்லவர்களும் தமிழர் அல்லர் எனலாம். பிற்காலப் பாண்டியர்கள் தமிழர்; இடைக்காலச் சோழர்களில் குலோத்துங்கர்கள் ஆட்சிக்கு முன்புவரை தமிழர் ஆட்சி வந்தது. குலோத்துங்கன், சோழ இளவரசிக்கும் சாளுக்கிய இளவரசருக்கும் பிறந்தவன் என்ற விதத்தில் அவன் ஆட்சியைக் கலப்பு ஆட்சியாகக் காண வேண்டியுள்ளது. அதன் பின் தெலுங்கர், கன்னடர், மராட்டியர், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரே தமிழகத்தை ஆட்சி செய்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே ஆட்சி செய்யலாம் என்ற ஜனநாயக முறை நிலவுகிறது. இந்நிலையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக அமர்ந்து ஆட்சி நடத்துவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை.

சில காலத்துக்கு முன்பு, ராமதாஸ் ‘தலித்’ ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்றார். தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் வன்னியர் ஏற்படுத்திய தாக்குதலுக்குப் பிறகு தற்காலத்தில் ‘வன்னியர்’ தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கருத்துப்படி தலித்தோ, வன்னியரோ, ஆட்சி நடத்துவதால் நமது நாட்டில் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?

எல்லா மனிதர்களும் சுதந்தரம் உள்ளவர்களாகவும் மதிப்பிலும் உரிமையிலும் சமமானவர்களாகவும் பிறக்கிறார்கள் என்பது உலகம் முழுவதிலும் பிரகடனம் செய்யப்பட்ட கோட்பாடாகும். மனிதர்களின் சம மதிப்பை ஒப்புக்கொள்வதற்குப் பெருந்தடையாக விளங்குவது இனக்கொள்கை. அதிலும் ராமதாஸ் தற்போது கையில் எடுத்திருப்பது சாதிக்கொள்கையை. இந்தியா விடுதலைக்குப் பிறகு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சிறிய அளவு முன்னேற்றம் கண்டும், அனைவரோடும் சம நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் முயன்று வரும் இந்நிலையில் இவ்வாறு சாதிக் கொள்கையை முன்னெடுத்திருப்பது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது.

தமிழ்நாட்டை பல கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. அதில் ஒன்றுகூட சாதிக்கட்சி இல்லை. ராமதாஸ் போன்ற சாதித் தலைவர்கள் தேர்தல் களங்களில் நிற்கும்போது பெரும்பாலும் (சாதியற்ற) ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, இப்போக்கு மற்ற சாதிர்களிடம் சாதிப்பற்றை அல்லது சாதிவெறியைத் தூண்டச் செய்யும். இந்தப் பிற்போக்கு எண்ணத்தால் நாட்டு மக்களின் சமூக, பொருளாதார ஒன்றுமை சீர்குலைக்கப்பட்டு வருவதை நாம் உணரத்தான் வேண்டும்.

1952ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த முதலாவது பொதுத் தேர்தலின்போது சில சுவரெழுத்து விளம்பரங்கள் சாதியைக் குறித்தே எழுதப்பட்டிருந்தன. தொழிலாளர் கட்சி என்றும் காமன் வீல் கட்சி என்றும் போட்டியிட்ட இருகட்சி தலைவர்களுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை ஆதரிக்கும் வகையில் ‘வன்னியர் ஓட்டு அந்நியர்க்கு இல்லை’ என்று சுவரெழுத்து முழக்கங்கள் எழுதப்பட்டன. இதை எதிர்த்து மற்றவர் ‘அந்நியர் ஆட்சி வன்னியர்க்கில்லை’ என்று எழுதினர். அத்துடன் ‘நண்டு நாடாள்வதா?’ என்பது போன்ற கேள்விக் கணைகளும் எழுந்தன. (இதன் பொருள்: நண்டை உணவாகக் கொள்ளும் பள்ளிகள் (வன்னியர்கள்) நாடாள வரலாமா? என்பதாகும். உண்ணும் உணவிலேயே இழிவு சுமத்தப்பட்ட கொடுமைக்கு இதனை ஓர் அடையாளமாகக் கொள்ளலாம்) இந்தச் சாதிவெறி கொண்ட அரசியல் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதிக் கொள்கையைக் கையிலெடுப்பது நல்லதா?

தங்களை அக்னிமூலம் என்றும், நாடாண்ட இனம் என்றும், பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும் கூறிக் கொள்ளும் வன்னியர்கள், ‘வன்னியன்’ என்ற ஒரு தனி இனமாக விளங்கத் தொடங்கிய காலம் பிற்காலப் பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் (கி.பி. 575 &900).

பல்லவர் காலம், அரசியல் வருண சாதிப் பிரிவுகளை வலுப்படுத்தியது. வீதிகளையும் வாழிடங்களையும் தொழிலிடங்களையும் வழிபாட்டு இடங்களையும் தர வரிசைப்படுத்தியது. உழைப்போரை ஊருக்கு வெளியே பிழைக்கச் செய்தது. அக்கிரகாரங்களையும், கோயில்களையும் புனிதமிக்க இடங்களாக்கியது. வேளாளர் என்போரை நிலவுடைமைகளாக்கி அவர்களுக்கு ‘பூமி புத்திரர்கள்’ என்ற புதிய நாமத்தை இட்டது. பிராமணர், சூத்திரர், புலையர் என்ற இறங்கு வரிசையை நிரந்தரமாக்கியது.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் 133 கல்வி இயக்க வளர்ச்சி மாநாடுகள் நடத்தினார். ஆனால் இன்று சாதித் தலைவர்கள் ஒன்றுகூடி தன் சாதி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், தேர்தல் காலங்களில் பணம்/பதவி சம்பாதிக்க தன் பலத்தைக் காட்டிக் கொள்ளவும் மாநாடுகள் கூட்டுகிறார்கள்.

மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் நடைபெறாத அதிசயத்தைக் (கல்விப் புரட்சி) செய்து காட்டியவர் காமராஜர் என்று தந்தை பெரியார் கூறினார். காமராஜரை விடவா இங்கு ஒருவர் வந்து நல்லதொரு ஆட்சியை அமைத்துவிட முடியும்?

தர்மபுரி மாவட்டத்தில் மெணசி (1989&90), மருக்காலம்பட்டி (2001), நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் (2012) ஆகிய கிராமங்களில் (ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை) வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நினைவுக்கு வருகின்றன.

சாதியமும் சமயமும் இங்கு பல நூற்றாண்டுகளாகச் சிந்தனை முறைகளாக மட்டுமின்றி வாழ்க்கை முறைகளாகவும் இருந்து வருவது உண்மை. என்றாலும், இச்சாதிகள் தமக்கு இடையில் ஓர் ஒழுங்கு அமைப்பை அரசதிகாரத்தின் துணை கொண்டு உறுதிப்படுத்திக்கொண்டு ஒற்றுமையுடன் வாழ நினைக்கின்றன. இந்நிலையில், ராமதாஸ் போன்றவர்கள் ஒரு சாதி அரசியலை முன்நிலைப்படுத்தி நாட்டைப் பிற்போக்குப் பாதையில் கொண்டு செல்ல முயல்வது கண்டிக்கத்தக்கது.

0 கருத்துகள்: