, ,

இரும்புப் பெண்மணி

- ரஞ்சனி நாராயணன்

Tags: ஆட்சியும் அரசியலும், தாட்சரிசம், போரும் அதிரடிகளும், மரணச் செய்தி, முதல் பெண் பிரதமரும்

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரும், இரும்புப் பெண்மணியுமான மார்கரெட் தாட்சர் 8 ஏப்ரல் 2013 அன்று மரணமடைந்தார். சில காலமாகவே அவர் அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிக் கணங்கள் அமைதியாகக் கழிந்தன என்று அவரது மகன் மற்றும் மகள் அவரது மரணம் பற்றிய தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால் அவருடைய ஆட்சிக்காலம் அமைதியாக இருந்திருக்கவில்லை.


13 அக்டோபர் 1925 அன்று மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டில் கிராந்தம் என்ற ஊரில் பிறந்து அந்நாட்டின் பிரதமராக தொடர்ச்சியாக மூன்று முறை (1979 &1990) இருந்தவர் மார்கரெட் தாட்சர். பத்தாண்டுகளுக்கும் மேலாக கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நவீன இங்கிலாந்தின் சரித்திரத்தில் குழப்பம் மிகுந்த, கலவரம் நிறைந்த காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த, முரண்பாடுகள் நிறைந்த தலைவர் இவர்.


இவரது மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் வருந்தியதாகவும், இவரது நினைவாக யூனியன் ஜாக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் எலிசபெத் ராணி கூறினார். டேவிட் கேமரூன் தனது இரங்கல் செய்தியில் திருமதி தாட்சரை, ‘மிகச் சிறந்த பிரதமந்திரியாகவும், பிரிட்டன் நாட்டின் ஒரு நல்ல குடிமகனாகவும் இருந்தவர். பலவிதமான பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றிகரமான பெண்மணியாக இருந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மார்கரெட் தாட்சரின் தந்தை ஆல்ஃப்ரெட் ராபர்ட்ஸ் ஒரு பலசரக்குக் கடையை நடத்தி வந்தவர். நகராட்சி குழு மூத்த உறுப்பினராகவும், மெதடிஸ்ட் சர்ச்சில் பிரசாரகராகவும் அவர் இருந்ததால் சிறுவயதிலேயே மார்கரெட்டும் அரசியல் ஆர்வத்துடனும், கண்டிப்பான சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக சாமர்வில் கல்லூரியில் வேதியியல் படித்து அதே துறையில் பின்னர் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.


1948ல் உள்ளூர் கன்செர்வேடிவ் அசோசியேஷனில் சேர்ந்து கட்சிக் கூட்டங்களில் பல்கலைக்கழகப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். கட்சியின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினராக இல்லாத போதும் வேட்பாளராக நிற்க மனுத் தாக்கல் செய்யும்படி உள்ளூர் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஜனவரி 1951ல் தேர்தல் வேட்பாளராகவும் பின்னர் கட்சியின் உறுப்பினராகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.


1950ல் டார்ட்ஃபோர்ட் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளர், இளம் வயது ஆகிய காரணங்களால் ஊடக கவனம் கிடைத்தது. சாமர்த்தியமான பேச்சாளராகவும் அப்போது அவர் அறியப்பட்டிருந்தார். இருந்தும் தோல்வியே கிடைத்தது. துவளாமல் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு தோற்றார். தேர்தல் பிரசாரங்களில் உறுதுணையாக இருந்த டெனிஸ் தாட்சரை 1951ல் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக அவருடைய உதவியால் சட்டப் படிப்பும் படிக்கமுடிந்தது.

ஆட்சியும் அரசியலும்

மேலும் சில சறுக்கல்களுக்குப் பிறகு, 1958ல் பிங்க்லே என்ற பகுதியின் வேட்பாளராக தாட்சர் தேர்வு செய்யப்பட்டார். 1959 தேர்தல் பிரசாரத்தில் கடினமாக உழைத்தன் பலனாக, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். ஹெரால்ட் மேக்மிலன் நிர்வாகத்தின் கீழ் 1961ல் தாட்சர் ஓய்வூதியம் மற்றும் தேசியக் காப்பீடு அமைச்சகத்தின் உதவிச் செயலராக பதவி உயர்வு பெற்றார். 1964ல் கன்செர்வேடிவ் கட்சி தேர்தலில் தோற்றது.

1967ல் லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தால் ஃபாரின் லீடர் ப்ரோக்ராம் என்ற உயரதிகாரிகள் பரிமாற்ற திட்டத்தில் கலந்து கொண்டு சுமார் 6 வாரங்கள் அமெரிக்காவில் தங்கி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களை சுற்றிப் பார்த்தும், அரசியல் பிரமுகர்களை சந்தித்தும் ஐஎம்எஃப் போன்ற நிறுவனங்களைப் பார்வையிட்டும் வந்தார்.

1970ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த எட்வர்ட் ஹீத் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சரவையில் மார்கரெட் தாட்சர் கல்வி, அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கல்வித் துறை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் 7 வயது முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் அரசின் திட்டத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைப் பறித்தவர் என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

இந்தச் செயலினால் பெரும் எதிர்ப்புக்கும், அதிருப்திக்கும் உள்ளான திருமதி தாட்சர் அரசியலை விட்டே விலகி விடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்தார். ‘ஒரு சின்ன அரசியல் ஆதாயத்துக்காக மிகப் பெரிய அரசியல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டேன்’ என்று தனது சுய சரிதையில் இந்தச் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகிறார் பிற்காலத்தில்.

ஹீத் தலைமையிலான அரசாங்கம் 1974 தேர்தலில் தோல்வியடைய, லேபர் கட்சி சிறுபான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைத்தது. அடுத்து வந்த கட்சித் தலைமைக்கான தேர்தலில் ஹீத்தை எதிர்த்துப் போட்டியிட்டார் தாட்சர். முதல் சுற்றிலேயே தாட்சர் வெற்றி பெற்றதையடுத்து ஹீத் கட்சித் தலைமை பொறுப்பையும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த இடமும் தாட்சருக்கே கிடைத்தது. 11 பிப்ரவரி 1975 அன்று கட்சித் தலைவராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் பதவி ஏற்றார் தாட்சர்.

ஆரம்பம் முதலே சோவியத்தை எதிர்த்து வந்த தாட்சர், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக அந்நாட்டை விமரிசித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் சோவியத் பாதுகாப்பு அமைச்சரவைப் பத்திரிக்கையான ரெட் ஸ்டார் அவரை ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிட்டது. அந்தப் பெயரை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

அடுத்து நடந்த 1979 தேர்தலில் வெற்றி பெற்ற தாட்சர், மே 4 அன்று பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் ஆனார். ஆனால் அந்தப் பெருமையை மீறி அவருடைய கொள்கைகள் விமரிசனத்துக்கு உள்ளானது. நாட்டின் பணப் புழக்கத்தில் அரசாங்கத்தின் பங்கை வலியுறுத்தும் மானிடரிசம் அவருடைய அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையாக அமைந்தது. நேரடி வரிகளைக் குறைத்து, மறைமுக வரிகளை அதிகரித்தார். நிதி விநியோகத்தை குறைக்க வட்டி விகிதங்களை அதிகப்படுத்தினார். சமுதாயப் பொதுச் செலவினங்களில் நிதி வரம்பை கொண்டுவந்து பண வீக்கத்தை குறைத்தார்.

கல்வித்துறையில் செலவினங்களைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க அவர் படித்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமே மறுத்துவிட்டது. தாட்சரின் கொள்கைகளின் மேல் நம்பிக்கை இழந்த பிரிட்டனின் ஊடகங்கள் விரைவில் அவர் தமது மக்கள் விரோதக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்த்தன. 1980 ஆண்டு நடந்த கட்சிக் கூட்டத்தில் ‘நீங்கள் வேண்டுமானால் முன் வைத்த காலை பின் வைக்கலாம். ஆனால் பெண்மணி (இப்படித் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்) பின் வாங்க மாட்டாள்’ என்று நேரடியாகப் பதில் சொன்னார்.

1982 வாக்கில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. பணவீக்கம் 18% என்ற உயர் நிலையிலிருந்து 8.6% ஆகக் குறைந்தது. ஆனால் வேலையின்மை 1930க்குப் பிறகு முதல் முறையாக 3 மில்லியனைத் தாண்டியது.

தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்ததில் தாட்சரின் பங்கு மிக அதிகம். தொழிற்சங்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், வேலை நிறுத்தங்கள்மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் தொழிலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார்.

சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களுக்கும் தாட்சர் அரசாங்கத்துக்கும் இடையே மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தியது. தாட்சர் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்தார். 20 சுரங்கங்கள் மூடப்பட்டன. 20,000 வேலைகள் பறிக்கப்பட்டன. ஒரு தலைமுறைக்கு உண்டான அதிகாரத்தைத் தொழிற்சங்கங்களிடமிருந்து தாட்சர் அழித்துவிட்டார் என்றது பிபிசி.

போரும் அதிரடிகளும்

தாட்சர் தனது முதல் பதவிக் காலத்தில் ஒரு ராணுவச் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. ஏப்ரல் 1982ல் அர்ஜெண்டினா ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றியது. நீண்ட நாள்களாகவே சர்ச்சைக்குரிய பிரதேசமாக இருந்த பிரதேசம் இது. தாட்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, உடனடியாக பிரிட்டிஷ் படையை அனுப்பி அர்ஜெண்டினாவின் தாக்குதலை முறியடித்தார். ஜூன் மாதம் அர்ஜெண்டினா சரணடைந்தது. இரண்டாவது பதவிக் காலத்தில் ஒருமுறை இவரது உயிருக்கு ஐரிஷ் குடியரசு ராணுவத்தால் அபாயம் நேர இருந்தபோது அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

சோவியத்தைப் பிடிக்காது என்றபோதும் கோர்பசேவைச் சந்தித்தார். ஹாங்காங் குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுக்கு ஆதரவளித்தார். லிபியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலுக்கு தன் ஆதரவைக் கொடுத்து அமெரிக்கப் படைகள் பிரிட்டனின் விமான தளத்தை பயன்படுத்தவும் உதவினார்.

மூன்றாவது முறையாகப் பதவிக்கு வந்தபோது நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை கொண்டு வர முனைந்தார். மருத்துவ முறைகளிலும் மாறுதல்களை புகுத்த நினைத்தார். ஆனால் உள்ளூர் வரி விதிப்பில் நிலையான ஒரு விகிதத்தை அறிமுகப்படுத்த முயன்றதால் பலரின் ஆதரவை இழந்தார். மக்களின் அதிருப்தியை சந்தித்தார். கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் அதிகரித்தன.

அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளாலும் ஃபாக்லாந்து போர் வெற்றியாலும் அசைக்கமுடியாத செல்வாக்குடன் இருந்த தாட்சர் 1990ம் ஆண்டு அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

தாட்சரிசம்

மார்கரெட் தாட்சரின் கொள்கைகள், அவரது கண்ணோட்டங்கள், நடை உடை பாவனைகள், செய்ய நினைத்தை விட்டுக் கொடுக்காமல் சாதிக்கும் முறை ஆகியவை தாட்சரிசம் என்ற பெயரால் அடையாளம் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் மிகச் சிறந்த பிரதமர்களுள் நான்காவது இடத்தைப் பெற்றவர் என்கிறது ஒரு வாக்கெடுப்பு.

அதே சமயம், இங்கிலாந்து மக்களால் வெறுக்கப்படும் ஒரு தலைவராகவும் தாட்சர் திகழ்கிறார். தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்து, வெளிநாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் சொத்து குவிக்க உதவும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை அமைத்தது ஆகியவை அவருக்கு எதிராகச் செயல்பட்டன.

ரொனால்ட் ரீகனுடன் சேர்ந்து தனியார்மய, தாராளமயப் பொருளாதார கொள்கைகளை தீவிரப்படுத்தி உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு வழி வகுத்தவர் தாட்சர். ஆட்சியில் இருந்தபோது இவர் பின்பற்றிய கொள்கைகள் மக்கள் விரோதத்தன்மை கொண்டவையாக இருந்தன. அவருடைய பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாளித்துவத்துக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் அமைந்துவிட்டன. அதனாலேயே அவர் முதலாளித்துவச் சிந்தனையாளர்களால் பாராட்டப்பட்டார், சாதாரண மக்களால் தூற்றப்பட்டார்.

தாட்சரின் மரணச் செய்தி கேட்டு பலர் வெடி வைத்துக் கொண்டாடியதற்கு இவையே காரணங்கள். தாட்சருக்கு அரசு மரியாதை கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் குரல் எழுப்பியதையும் இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். அரசியல் களத்தைப் பொருத்தவரை, ஒருவரை யார் ஏற்கிறார்கள், யார் நிராகரிக்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவருடைய பங்களிப்பை மதிப்பிடவேண்டும். தாட்சருக்கும் இந்த அளவுகோல் பொருந்தும்.

0 கருத்துகள்: